"சிவ' வழிபாடு
தொன்மைவாய்ந்தது என்பது
"ஓம்' எனும்
பிரணவமந்திரம்
அண்ட வெளியில் ஆர்ப்பரித்து
கொண்டே இருப்பதில் தெரிகிறது..
முன்னோர்கள்,
முன்னவர்கள், முனைவர்கள்
கண்டதை சிற்பமாக்கினார்கள்...
கேட்டதை
மந்திரமாக்கினார்கள்
"இறை' நிலைத்து நிற்க...
லிங்கத்தை
வீட்டில் வைத்து வழிபடாதே...
அவதிப்படுவாய்..
உனக்கு மட்டும்
படைக்கப்பட்டவரா சிவன்?...
உன்னையே
படைத்தவரடா சிவன்...
அவரை அடக்கி உன்னுள்
வைத்துக்கொள்ள முடியுமா
மானிடா?!...
சிவத்தில் இருக்கும் சக்தியை
சக்தியில் இருக்கும் சிவத்தை
லிங்க வடிவம் உணர்த்துகிறது..
"நீயின்றி நானில்லை
நமக்குள் உண்டான உறவு
ஆழமானது' என
இல்லறத்தை இன்புற செய்து
அகமும் புறமும் சுத்தமாக்கும்
நல்லறிவை போதிக்கும் வடிவம்தான்
மகா லிங்கம்..
உலகெங்கும் பக்தர்களை
ஆள் சேர்க்கும்
அற்புதங்களை சிவம்
நிகழ்த்துவதில்லை..
பல்லாயிரம் கோடி ஆண்டுகளாய்
ஆணும் பெண்ணும்
இணையும் பந்தத்தை சொல்லும்
லிங்க வடிவம்
மகத்துவமானது...
சிவனை வழிபட்டவர்க்கு
கேட்ட வரம் கிடைக்கும்..
அதில்
அற்புதங்களும் அதிசயங்களும் உண்டு...
மறைக்கப்பட்டும்
புதைக்கப்பட்டும்
மறுபடி மறுபடி மீண்டும்
மீட்டெடுத்து வரும் "சிவன்'
இறைத்தூதரல்ல..
அவனே சிவன்
அனைத்தும் சிவன்,
ஆதிசிவன்...
மனிதனை தோற்றுவித்து
மனிதனோடு பயணித்து
மனிதனாய் வாழ்ந்து
மனிதனை திருத்தி
மனிதனை வாழ்த்தி
திருப்திகரமான வாழ்வுதரும்
சிவனே போற்றி போற்றி...
சிவனடியார்களான
சிவனடிமைகள்
"ஓம்' எனும் மந்திரத்தை
உச்சரிக்க... உச்சரிக்க...
உங்களின் வேண்டுதல்
சிவலோக கதவுகளுக்கு
சென்றடையும்...
விதியை வெல்லும்
விதியை மாற்றும்
வல்லமைகொண்ட சக்தி
சிவ மந்திரத்திற்கே உண்டு...
பரம்பொருளை
கண்டவன் எவனுமில்லை...
கனவில் கண்ட கடவுளையே
காவிய நாயகனாக்கினான்...
ஆணும் பெண்ணும்
திருநங்கையும் என
மூன்றும்தான் மனித குலம்..
அதில்
ஆண் பெண் சேர்தலே
சிவனும் சக்தியும் சேர்ந்த
மகா லிங்கம்..
அதில் அர்த்தநாரீஸ்வரரே
திருநங்கை...
என் கேள்விக்கான
பதிலில்தான்
மனித குலம் பயணிக்கிறது...
கேள்வி கேள்?!...
அப்போதுதான்
உனக்கு பதில் கிடைக்கும்...
மனித இனம் இன்னொரு
இனத்துடன் கலந்து
புதிய இனத்தை உருவாக்கமுடியுமா?
மரணமில்லா மனிதனை
மனிதனால் படைக்கத்தான் முடியுமா?
மனிதனால் சாத்தியப்படுத்த
முடியாததென்பது உலகில்
இன்னும் இப்படி நிறைய உண்டு...
அரைகுறை ஆன்மிகம்
அழிந்தே போகும்...
அதனால்தான்
உன் ஆசை கிடைத்தால்
இறைவனை புகழ்கிறாய்...
உன் ஆசை கெட்டால்
கடவுளை இகழ்கிறாய்...
மனிதரில் பாதி பேர் குழப்பவாதி
சில பேர் பிறரை குழப்பும்வாதி...
தன்னை உணர்பவன் கடவுள் ஆகிறான்
தன்னைக் காப்பாற்றிக் கொள்பவனும்
கடவுள் ஆகிறான்...
பக்குவம் கொண்டவன் மட்டுமே
பக்தன் ஆகிறான்...
"விஞ்ஞானிகள்'
தான் கண்டறிந்ததே
கடவுள் அருளால்தான் என்பார்கள்..
"மெய்ஞானிகள்'
எல்லாம் கடவுள் சித்தம் என்பார்கள்..
கடவுளை நினைப்பவனும்
கடவுளை வெறுப்பவனும்
நினைப்பதென்னவவோ கடவுளைத்தான்...
மனிதன் எப்போதும்
உள்ளும் புறமும்
பொய்யானவன்...
அனைத்தும் அறிந்த சிவன்..
ஆட்டிவைத்தால் ஆடாதவர்
இங்கு யாரேனும் உண்டா?!...
கடவுளர்களை உருவாக்கும்
மனிதர்களே...
நான் கனவுகண்ட...
நான் வணங்கும் கடவுளே
உலகின் "ஒரே கடவுள்' என
ஆணவமாய் உளராதீர்கள்...
"நான் வணங்கும் தெய்வத்தை
நீயும் வணங்கு' என
மற்றவர்களையும் வற்புறுத்தாதீர்கள்..
பரம்பொருள் உருவமற்றவர்
பேரொளி கொண்டவர்...
பேரண்டத்தின் பேரொளி..
மரணித்து போகும் மனிதன்
மலம் சிந்தும் மாமனிதன்...
நீ ஒருபோதும்
மாயோன் ஆக முடியாதடா...
"ஒன்றே குலம்,
ஒருவனே தேவன்'
தமிழ் பாட்டன்
சொன்னதே நிஜம்...
மானுடம் தெரிந்துகொள் மனிதா...
மனிதருக்குள் மனிதம்
பார்க்காமல் போனால்..
மனித இனம் காணாமல் போய்விடும்..
பகுத்தறிந்தே சொல்கிறான்
நையாண்டிச் சித்தன்...
நம்மை இயக்கும் சக்தி
ஒன்று உண்டு..
அதனை அடக்கும் சிவனை
சிவனேன்னு சிரம் தாழ்த்தி வழிபடு...
சிவலோகம் சித்தமாய் சேர
உனக்கு பாக்கியம் கிட்டும்..
"ஓம் நமச்சிவாய'
"ஓம்.'
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/08/siva-2025-08-08-17-49-17.jpg)